ஆசிரியர் பக்கம்
பேராற்றலாக உருப்பெறும் ‘பி-ரி-க்-ஸ்’
அன்பு வாசகப் பெருமக்களே!
தமிழ்நாடு, இந்தியா எனும் எல்லைகளைக் கடந்து, உலக அரங்கில் சிந்திக்க இன்று உங்களை அழைக்கின்றேன்! இன்றைய உலக அரங்கில் நடைபெறும் வரலாற்று நிகழ்வுகளைச் சற்றே ஆழ்ந்து சிந்திக்க உங்கள் பார்வை சற்றே விரிவடையட்டும்.
அண்மையில் ஆகஸ்டு 22 அன்று ‘பிரிக்ஸ்’ எனும் கூட்டமைப்பின் மாநாடு தென் ஆப்பிரிக்காவில் நடந்தேறியுள்ளது. பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் முக்கிய நாடுகளாகக் கருதப்படும் பிரேசில், இரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பே (B-R-I-C-S) ‘பிரிக்ஸ்’ என அழைக்கப்படுகின்றது. இப்பெயர் அந்நாடுகளின் முதலெழுத்துகளின் இணைவு ஆகும்.
ஒவ்வோர் ஆண்டும் சுழற்சி முறையில் இந்த நாடுகளில் ஒன்று தலைமைப் பொறுப்பேற்று இம்மாநாட்டை நடத்தி வரும் சூழலில், இந்த அமைப்பின் 15-வது மாநாடு தென் ஆப்பிரிக்கத் தலைநகர் ஜோகன்னஸ்பர்கில், கடந்த ஆகஸ்டு 22 முதல் 25 வரை நடைபெற்றது. மேலை நாடுகள் மட்டுமல்ல, வளர்ச்சி அடையும் நாடுகளும் குறிப்பாக ‘ஜி-7’ மற்றும் ஐரோப்பியக் கூட்டமைப்பில் உள்ள நாடுகளும் இந்த மாநாட்டைக் கூர்ந்து கவனித்து வந்தன.
மேற்கு வல்லரசுகளைக் குறிப்பாக அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளை முற்றிலுமாகத் தவிர்த்து உருவாக்கப்பட்ட மாற்றுக் கூட்டமைப்புதான் இந்தப் ‘பிரிக்ஸ்’. வளர்ச்சியடைந்த நாடுகளின் ‘ஜி-7’ கூட்டமைப்புக்குச் சவால்விடும் வகையிலான மாற்றுக் கூட்டணியாக இந்தப் ‘பிரிக்ஸ்’ உருவெடுத்துள்ளது.
இரஷ்யாவின் முன்னெடுப்பில், 2009 இல் கூடிய முதல் மாநாட்டில் தென் ஆப்பிரிக்கா இடம்பெறவில்லை. ஆயினும், 2010 இல் தென்ஆப்பிரிக்காவும் சேர்ந்த பிறகு ‘பிரிக்’ என்ற இந்தக் கூட்டமைப்பு ‘பிரிக்ஸ்’ ஆக உருமாற்றம் பெற்று, உலக மக்கள் தொகையில் 40 விழுக்காடாகவும், உலக ஜி.டி.பி.யில் (Gross Domestic Product) அதாவது, மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் சேவைகளின் மதிப்பு விகிதாச் சாரத்தில் 23 விழுக்காடாகவும் உயர்ந்து, வலிமையான கூட்டமைப்பாக மாறியுள்ளது. குறிப்பாக, இன்றைய உலக அரசியலில் ஒரு மாபெரும் ஆற்றலாகப் ‘பிரிக்ஸ்’ பரிணமித்திருக்கிறது என்றால் அது மிகையாகாது.
நாற்பதிற்கும் மேற்பட்ட நாடுகள் இக்கூட்டமைப்பில் சேருவதற்கு விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், குறிப்பாக 19 நாடுகள் உறுப்பினராவதற்கு முறையாக விண்ணப்பித்திருந்த சூழலில் அர்ஜென்டினா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய ஆறு நாடுகள் புதிய உறுப்பினர்களாகச் சேர்த்துக் கொள்ளப்பட உள்ளன. 2024, ஜனவரி 1 அன்று இப்புதிய நாடுகள் அதிகாரப்பூர்வமாக இணைய உள்ளன. இவ்வாறாக, இக்கூட்டமைப்பு இன்னும் விரிவடைய இருப்பது மேற்கத்திய வல்லரசு நாடுகளுக்குப் பெரும் அதிர்ச்சியே!
பொருளாதார, வர்த்தக மற்றும் புவிசார் அரசியலில் மேற்கத்திய நாடுகளை எதிர்கொள்ளும் நோக்கில் உருவாக்கப்பட்டு வரும் இக்கூட்டமைப்பில், இரஷ்யாவும், சீனாவும் ‘பெரியண்ணன்’ (Big Brother) மன நிலையில் அதிகாரம் செலுத்தக்கூடும் என அரசியல் நிபுணர்கள் கணிக்கின்றனர். அவ்வாறே, விண்ணப்பித்திருக்கும் நாடுகளை எல்லாம் இக்கூட்டமைப்பில் இணைத்துக்கொள்வதில் பெரும் சூழ்ச்சி இருப்பதையும் இந்தியா நன்றாகவே உணர்ந்திருக்கிறது. உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான சீனாவின் கைப்பாவைகளாக அவைகள் பின்நாளில் மாறக்கூடும் என்பதும் இந்தியாவின் சந்தேகமே! அத்தகைய சூழலில், இவை அமெரிக்காவுக்கு முற்றிலும் எதிரான அமைப்பாக மாறிவிட வாய்ப்பிருப்பதால், இந்தியா சற்றே தயங்குவதும் இங்கே நன்கு புலப்படுகின்றது. ஆகவேதான் இந்தியா இப்புதியக் கூட்டமைப்பை வரவேற்ற போதிலும், புதியவர்களின் இணைப்புக்கான விதிமுறைகளும், செயல்முறைகளும் தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இது சீனாவின் நாளைய கனவு தகர்க்கப்படுவதற்கான எச்சரிக்கையாக இருப்பதாகவே அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள். ஆயினும், இந்திய-சீன எல்லைப் பிரச்சினை நிலவிவரும் இச்சூழலில் இவ்விரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்பு, சிறப்பு வாய்ந்ததாகவே எதிர்பார்க்கப்பட்டது; இன்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், அடுத்த வாரம் செப்டம்பர் 9,10 ஆகிய நாள்களில் இந்தியாவில் நடைபெற உள்ள ‘ஜி-20’ மாநாட்டில் சீனா உள்ளிட்ட ‘பிரிக்ஸ்’ உறுப்பு நாடுகள் அனைத்தும் கலந்துகொள்வதில்தான் இக்கூட்டமைப்பின் வெற்றி முழுமையாக வெளிப்படும் எனக் கருதப்படுகிறது.
இருப்பினும், இன்றைய சூழலில் ‘பிரிக்ஸ்’ பேராற்றலாக உருப்பெற்றிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. அது நாளும் ஆற்றல் மிக்கக் கூட்டமைப்பாக உருமாறிக்கொண்டிருக்கிறது என்பதும் உலக அரசியலில் வியக்கத்தக்கது.
தங்கள் தனிப்பட்ட அரசியல் கொள்கை, கலாச்சாரம், இன ஒற்றுமை இவற்றையெல்லாம் கடந்து, இந்தக் கூட்டமைப்பின் நாடுகள் ஓர் ‘உலகமய அமைப்பை’ உருவாக்க முடியும்; ஒரே குடையின்கீழ் ஒன்றிணைய முடியும் என்பதை இன்று உலகிற்குப் பறைசாற்றியுள்ளன. ‘எருமைகள் ஒன்றுசேர்ந்து சிங்கத்தை விரட்டிய கதையே’ இங்கு என் நினைவுக்கு வருகின்றது. பொருளாதாரத் தளத்தில் உலக வங்கிக்கு மாற்றாக ‘New Development Bank’ (NDB) எனும் ‘புதிய வளர்ச்சி வங்கி’ யை உருவாக்கி, உலக வங்கிக்கு நிகராகக் கடன் உதவி அளிக்கும் நிறுவனமாக உயர்ந்துள்ளது ‘பிரிக்ஸ்’ இன் மற்றொரு மிகப்பெரிய சாதனையே!
ஆகவே, உலகப் பொருளாதாரத்தில் கூட்டாக ஆதிக்கம் செலுத்த, பேராற்றலாக உருப்பெற்று வரும் ‘பிரிக்ஸ்’ இன்றைய அதிகார அரங்கில் உலகளாவிய மேலாதிக்கத்திற்கு விடப்பட்டுள்ள மிகப் பெரிய சவாலே!
அன்புத் தோழமையில்,
அருள்பணி. செ. இராஜசேகரன்
Comment